Tuesday, 12 January 2016
சிங்கப்பூரில் பொங்கல் விழா 2016!
சிங்கப்பூரில் நான் கொண்டாடிய பொங்கல் விழா!
உலகத்திற்கே படி அளக்கும் விவசாயி தனக்குப் படி அளந்தோர்களுக்கு நன்றி நவிலும் நாள்தான் பொங்கல் திருநாள். அப்போது எனக்கு 6 வயது, தமிழ்நாட்டின் விக்கிரமம் எனும் கிராமத்தில் பொங்கல் விழாவைனைக் கண்டு களிவுற்றேன். முதள் நாள் காலையில் சூரியன் உதயமாகும்போது புத்தம் புது அரிசியைப் பொங்கலிட்டு அது பொங்கி வரும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று நான் என் குடும்பத்தோடு கூவியது நினைவில் பசுமையாக இருக்கிறது. முசுலிம், கிறித்துவ சமயத் தமிழர்களும் பொங்கல் கொண்டாடினர். இப்போதுப்போல அப்போதெல்லாம் ஐயரிடம் பொங்கல் வைப்பதற்கு நல்ல நேரம் எத்தனை மணிக்கு என்று கேட்கமாட்டார்கள். தமிழனுக்கு நல்ல நேரம் கெட்ட நேரமென்பதெல்லாம் இல்லை. நாங்கள் போட்டிருந்த ஆடை அணிகலன் எல்லாமே புதிது. உழவனுக்குப் பொங்கல்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம். ஒராண்டுகாலம் உழைத்த உழைப்பினால் கிடைத்த புத்தம் புதிய அரிசி தான் அவன் குடும்பத்தின் ஆண்டுச்சம்பளம்.
=======================================================================================
இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘போகி’ பொங்கல் என்பதும் முன் பின் கேள்விப்படாதது. போகி என்பது ஆரியர்களால் இந்திரனுக்குக் கொண்டாடப்பட்ட நாளாம். உயிருடன் மாடு, குதிரைகளைய் யாகக்குண்டத்தில் இட்டு தீயிட்டு அவற்றை இந்திரனுக்குப் பரிசுகளாக அனுப்பிவைக்கும் விழா. இவ்விழா ஆந்திராவில் மிகப் புகழ்பெற்றது. இராமர் காலத்தில் தென்னிந்தியாவில் வாழ்ந்த தமிழர்கள் எப்போதும்போல உயிர்களிடத்தில் அன்பு கொண்டவர்கள். ஆனால் வடநாட்டிலிருந்து தென்னாட்டின் காடுகளில் புகுந்து ஆரியர்கள் இவ்வாறு யாகம் நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டு அரசர்கள் இந்த உயிர் வதையைத் தடுக்க பெண்களின் தலைமையில் உள்நாட்டுப்படைகளை ஏவியுள்ளனர். அப்படிப்பட்ட படைத்தலைவிகளுள் ஒருத்திதான் இராமரால் கொல்லப்பட்ட ‘தாடகை’யாம். =======================================================================================
2ஆம் நாள் மாட்டுப்பொங்கல், மாடுகளின் கொம்புகள் பல வண்ணங்களில் தீட்டப்படிருந்தன; ஆண்டுமுழுதும் மாடாக உழைத்த மாடுகள், பசுக்கள் மாலைகள் அணிவித்து கெளரவிக்கப்பட்டன; அவற்றுக்கு வாழைப்பழமும் கரும்புகளும் ஊட்டப்பட்டன. அன்று மாலை நடந்த காளைவிரட்டு நிகழ்ச்சி பார்க்கப் பயமாகத்தான் இருந்தது. முன்பெல்லாம் முரட்டுக்காளையை வீரத்துடன் அடக்கும் மனிதக்காளைகளுக்குப் பெண்கொடுக்க ஊரார் காத்திருந்தனர். இப்போது காளைகளைக் கொடுமைப் படுத்துவதாக சிலர் வழக்குத்தொடர்கின்றனர். தமிழர் அப்படிப்பட்ட முரட்டுக் காளைமாடுகளைக் கொடுமைப்படுத்துவதில்லை. மாடுகள்தான் இளையர்கள் பலரை முட்டி முடமாக்கியுள்ளன. =======================================================================================
3ஆம் நாள் ‘கன்னிப்பொங்கல்’ – ஆமாம், கன்னிகளின் பெருநாள். தைபிறந்தால் கன்னிப்பெண்களுக்கும் வழிபிறக்குமாம். நாளடைவில் சில குழப்பவாதிகள் இதற்கு ‘காணும் பொங்கல்’ என்று பெயர் சூட்டினர். கிராமத்தின் ஒருபுறத்தில், ஆற்றங்கரையின் ஓரத்தில் பெண்களுக்கு மட்டுமான நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்கள் யாரும் போகமுடியாது. சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையென்று என் அக்காள்கள் என்னையும் அழைக்காமல், ‘பெண்கள் ஒன்று கூடலுக்கு’ச் சென்றுவந்தனர். கூட்டாஞ்சோறு ஆக்கி உண்டனராம். ஒன்றாக சேர்ந்து ஆடிபாடி மகிழ்ந்தனராம். அவை அக்காள்கள் சொன்னவைதான். =======================================================================================
4ஆம் நாள்தான் உற்றார் உறவினர்களைக் கண்டு மகிழும் ‘காணும்’ பொங்கலாம். =======================================================================================
மறு ஆண்டில் சிங்கப்பூரில் குடியேறிய எனக்கு அப்போது வயது ஏழு. அன்று பொங்கல் விழா!. விழாக்கோலம் பூண்டிருந்த என் கிராமத்தில் நான் கொண்டாடிய பொங்கலுக்கான எந்த அடிச்சுவடும் சிங்கப்பூரில் இல்லை. என் தாயார் புது பானை வாங்கிவந்து புது அடுப்பில் பொங்கல் வைத்தார், நானும் என் அம்மாவும் மட்டும் 'பொங்கலோ பொங்கல்' என்று சத்தம் போட்டோம். வேலைசெய்யும் தமிழர்களுக்கு மட்டும் அன்று விடுமுறையாம். ஆனால் என் தந்தை வேலைக்குப் போய்விட்டார். பக்கத்து வீட்டில் வாழ்ந்த சீனக்குடும்பத்திடம் பொங்கலைப் பற்றி விளக்கும் அளவுக்கு எனக்கு அப்போது விவரம் போதவில்லை. மறுநாள் மாட்டுப்பொங்கல். என் தாயார் எங்கள் முன்னோர்களுக்காக படையலிட்டு வணங்கினார். அன்றுமட்டும் கோழி, ஆட்டுக்கறி போன்றவை ஆக்கப்பட்டன. மூன்றாம் நாள் கன்னிப்பொங்கல். கன்னிப்பொங்கல் கொண்டாட எந்த கன்னிகளைக் காணோம். =======================================================================================
நான் முதலில் குடியிருந்த இடம் எண் 13, கஃப் (ரோடு) சாலை. நான் வாடகைக்கு இருந்த அந்த வீட்டின் முன்னால் ஒரு வடநாட்டுக்காரர் தேநீர் கடை வைத்திருந்தார். அக்கடையில் தமிழர்கள் படிப்பதற்காக தமிழ் முரசு வாங்கி வைத்திருப்பார். காலையில் எழுந்தவுடன் நாளேட்டைப்படிக்க கடைக்குப் போய்விடுவேன். அப்போதே தமிழ்முரசு படிக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. அப்போதுதான் 'தமிழர் திருநாளைப்பற்றி' நாளேட்டில் படித்தேன். சிங்கப்பூர் தமிழர்கள் பொங்கலுக்குப்பதிலாக தமிழர்ப்பெருநாள் கொண்டாடுவதாக எண்ணினேன். உறவினர் உற்றாருடன் ஊரே ஒன்று கூடி கொண்டாடிய ஒரு பெரிய விழாவை இழந்துவிட்டதாக ஏக்கம் தோன்றியது. ஆண்டுகள் சில ஓடின. =======================================================================================
60’களில்:- செம்பவாங் பகுதியில் சில தமிழர் சங்கங்கள் இயங்கி வந்தன. தமிழர் இயக்கம் பொங்கல் நிகழ்ச்சிகளிலும், செம்பவாங் தமிழர் சங்கம் தமிழர் திருநாளிலும் கவனம் செலுத்தின. எச்சங்கத்துக்கும் சொந்தமான எந்தக் கட்டடமும் இல்லை (இப்போதும்தான்). தமிழர் இயக்கம் நடத்திய 67ஆம் ஆண்டு கலைநிகழ்ச்சியில் மாணவனான நானும் ‘திருவள்ளுவர்’ எனும் நாடகம் ஒன்றில் கலந்துகொண்டேன். அப்போது பள்ளி மாணவனாராக இருந்த என் நண்பர் திரு மா.பெ.சாமி தான் அதற்காக ஏற்பாடு செய்தார். தமிழர் இயக்கம் இளையர்களுக்கான பந்துவிளையாட்டுப் போட்டி, மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி முதலியவற்றை நடத்தின. அரசாங்கம் குறைந்த விலை அடுக்குமாடி வீடுகளைக் கட்டியது. கிராமத்திலிருந்தவர்கள் இப்படிப்பட்ட வீடுகளுக்குக் குடியேறினர். ஒவ்வொரு வட்டாரத்திலும் 10% தமிழர்கள்தான் குடியேறமுடியும். திடீரென்று தமிழ் நிகழ்ச்சிகள் ஓய்ந்தன. அப்போதுதான் இவர்களை எப்படி ஒன்று கூட்டுவது என்று சிந்திக்க ஆரம்பித்தேன். 80களில் அதற்கான விடைகிடைத்தது. =======================================================================================
70களில்:- என் வீட்டின் அருகிலிருந்த காலாங் சமூக நிலையத்தின் இந்திய கலாச்சாரக் குழுவிலிருந்தேன். சமூக நிலைய கூடங்களில் பொங்கல் விழா கலைநிகழ்ச்சியைக் கொண்டாடினோம். விரைவில் நான் 'வெண்ணிலா கலை அரங்கம்' என்ற ஒரு சங்கத்தின் தலைவர் பொறுப்பினை ஏற்க வேண்டியிருந்தது. அது ஒரு கலைவளர்க்கும் அமைப்பு. இருந்தாலும் அச்சங்கம் வழி பொங்கல் விழாவைப் பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்ற அவா ஏற்பட்டது. புக்கித் தீமா வட்டாரத்தில் வாழ்ந்த சில நண்பர்கள் வெண்ணிலா கலை அரங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தனர். இங்கு பழைய ‘மலாயா ரயில்’ நிலையத்தில் பணிபுரிந்த தமிழர்களின் வீடுகள் இருந்தன. அவர்கள் உதவியுடன் புக்கித்தீமாவில் (இப்போதைய புக்கிட் பாஞ்சாங் இலகுரக ரயில் நிலையத்தின் அருகில்) ஒரு பள்ளித் திடலில் சில விளையாட்டுப் போட்டிகளை நடத்தினோம். அவற்றுள் கயிறு இழுக்கும் போட்டியும், கபடியும் பலரையும் ஈர்த்தன. அதுவும் பெண்களுக்கான கபடி விளையாட்டுப்போட்டிக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. நிகழ்ச்சியன்று எங்கு பார்த்தாலும் தமிழர்கள் கூடியிருந்தனர். என்னுடைய ஆறு வயது நினவுகள் மீண்டும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அருகில் இருந்த ஜொகூரிலிருந்து சில ஆண் குழுக்களும் பெண் குழுக்களும் கலந்துகொண்டன. அவ்வமையம் தமிழ்நாட்டிலிருந்து வந்து சிங்கப்பூரில் வேலைசெய்த தொழிலாளிகளும் கலந்துகொண்டனர். மூன்று நாடுகளுக்கு இடையேயான போட்டி. ஆமாம் அதுதான் நான் கண்ட முதல் ‘உறவுப்பால’ நிகழ்ச்சி. சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் குழு ஒன்றும், ஜொகூரைச் சேர்ந்த ஆண் குழு ஒன்றும் வெற்றி வாகை சூடின. ஒரு வாரம் கழித்து அதே பள்ளிக்கூடத்துக்கு அருகில் இருந்த ஒரு (பழைய புக்கித் தீமா) சமூக நிலையத்தில் எங்கள் பொங்கல் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. முன்பே நடந்து முடிந்த கோலமிடும் போட்டி, பாட்டுப்போட்டி, கபடிப் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி முதலியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு அளிக்கப்பட்டது. அதற்குப்பின் சில ஆண்டுகள் என் இராணுவ பணிகாரணமாக பொது வாழ்வில கலந்துகொள்ள இயலவில்லை. =====================================================================================
80’களில்:- ஃபேரர் பார்க் பொதுவீடமைப்புக்கழக வீட்டுக்குக் குடியேறினேன். 'கேர்ன்கில்' சமூக நிலையத்தில் ஒரு தமிழ்ப் பண்பாட்டுக் குழு ஆரம்பிக்க முயன்றேன். குடியிருப்பாளர் குழுவில் இணைந்த நான் மற்ற தமிழ் குடியிருப்பாளர்களுடன் சேர்ந்து பொங்கல் விழா ஏற்பாட்டுக்குழு ஒன்று அமைத்தேன். அவ்வட்டார நாடாளுமன்ற ஆலோசகரின் அனுமதி கிடைத்தது. அக்கலைநிகழ்ச்சியில் நான் பேசியபோது பொங்கல் விழா ஒரு நன்றித்திருநாள் என்று விளக்கம் அளித்தேன். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் - நாடாளுமன்ற உறுப்பினர் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அப்போதுதான் நான் அச்சமூக நிலையத்தில் ஒரு தமிழ் பண்பாட்டுக்குழு அமைக்கவிரும்புவதை எடுத்து விளக்கினேன். உடனே அனுமதி கிடைத்தாலும் அந்த தமிழ்ப் பண்பாட்டுக்குழு (இந்தியர் கலாச்சாரக் குழு என்ற பெயரில்) சுமார் மூன்று ஆண்டுகளுக்குப்பின்னர்தான் (1986ல்) பெக் கியோ சமூக நிலையத்தில் அமைக்கப்பட்டு பல சாதனைகளை உருவாக்கியது. அங்கு சிலம்பம், கோலம் வரைதல் போன்ற பல பண்பாட்டு வகுப்புக்கள் நடைபெற்றன. ஆண்டுதோறும் பொங்கல் விழாக்களும் கொண்டாடப்பட்டன. =====================================================================================
இப்போதெல்லாம் ஆண்டுக்கு ஆண்டு வீட்டில் பொங்கல் விழா கொண்டாட தவறுவதில்லை. வீட்டில் ஆண் குழந்தைகளுக்கு வேட்டியும், பெண்குழந்தைகளுக்கு பாவாடையும் அணிவித்து அவர்களுக்கு மறைந்து வரும் ஒரு விழாவினை நினைவுபடுத்தி வருகிறோம். அதுதான் தமிழர்களின் புத்தாண்டு என்றும் விளக்கி வருகிறோம். ஆனால் பொங்கல் விழாவை விட தமிழர்களுக்கு சொந்தமில்லாத தீபாவளி விழாவும், சித்திரை மாதம் கொண்டாடப்படும் புத்தாண்டும்தான் எங்குபார்த்தாலும் அதிகம் செல்வாக்குப்பெறுகிறது. =====================================================================================
சிங்கப்பூரில் ‘தமிழர் திருநாள்’ என்று ஒன்று கொண்டாடுவதை நான் விரும்பவில்லை. மலையாளிகள், தெலுங்கர்கள், தமிழர்களுடன் தமிழ்மொழியைப் பாடமாகப் படித்த பல இனத்தினர் தம்மை தமிழ் பேசும் சமுதாயமாகக் கருதுகின்றனர். சிங்கப்பூரில், கலப்புத்திருமணங்களாலும் ஒரே குடும்பத்தில் தமிழர், மலையாளி, தெலுங்கர் இனத்தவர்கள் ஒன்று சேர்ந்து வாழ்கின்றனர். அனைவரும் தமிழ் மொழியில்தான் பேசுகின்றனர். இவர்களைப் பிரிக்க நாம் ஏன் ‘தமிழர்’ திருநாள் கொண்டாட வேண்டும். பல இனத்தவரும், பல மொழியினரும் கொண்டாடும் பொங்கல் திருநாளை, “தமிழ்ப்புத்தாண்டு” என்றே அழைப்போம். அதுவே நமது ஒற்றுமைத்திருநாள். மா கோவிந்தராசு (மாகோ) சிங்கை 2014
Subscribe to:
Posts (Atom)
STC's Voice
- Network Session with Narpani PA - 6 January 2016
- Meeting with HEB_Thaipusam 2016 was held on 17 November 2015
- Meeting with DBS_Tamil options in ATMs was held on 09 September 15
- 2nd Temples Round Table meeting, hosted by Arulmigu Darma Muneeswaran Temple - 20 November 2011
- Singapore Hindu Temples Round Table Meeting - 21 August 2011